கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”மக்கள் விரோத திமுக அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டிற்கே எதுவும் செய்யாத வெற்று ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு எந்த திட்டத்தையும் திமுக அரசு தரவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதை எதுவும் செய்யவில்லை.


ஒன்றும் தெரியாத கையாலாகாத முதலமைச்சர் ஸ்டாலின். கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கிறது. எடப்பாடி பழனிசாமி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கோ, கோவை மாவட்டத்திற்கோ எந்த வேலையும் திமுக அரசு செய்யவில்லை. அதிமுக அரசு கட்டிய பாலங்களில் திமுக போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு எதுவும் செய்யவில்லை. மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.




சொத்து வரி, மின் கட்டண உயர்வால் திமுக அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. முதியோர், விதவை உதவித் தொகையை நிறுத்திய பாவம் சும்மா விடாது. அத்திகடவு - அவிநாசி திட்டத்தின் 5 சதவீத பணிகளை கூட திமுக அரசு செய்யவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மூலம் தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு தேவையான திட்டங்களை தரும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். காவல் துறை திமுகவிற்கு ஜால்ரா போடாதீர்கள். அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடாதீர்கள். பெண் காவலருக்கே திமுகவினர் பாலியல் தொந்தரவு செய்தனர். இந்த ஆட்சியில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லை. 


காவல் துறையினர், அரசு அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள். எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை, மணல் கடத்தலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். திமுகவினர் காவல் துறையினர் உடன் இணைந்து கஞ்சா விற்கிறார்கள். காவல்துறை செயல்பட திமுக விடுவதில்லை. காவல்துறை ஏவல் துறையாக உள்ளது. கருணாநிதி இருக்கும் போது கூட இந்தளவு மோசமான ஆட்சி இருந்ததில்லை. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது தான்.  அதிமுக போராட்டம் அறிவித்த பிறகே, பொங்கல் பரிசாக கரும்பு கொடுக்கிறார்கள்.




திமுக ஆட்சி போய்விடும். திமுகவினரே இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லும் அளவிற்கு மோசமான ஆட்சி நடக்கிறது. திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தப்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது, பெட்டியோடு வந்து மனுக்களை பெற்றார். அந்த பெட்டி எங்கே‌ உள்ளது? மோசமான ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் குடும்பம் 50 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளது. அதிமுகவினர் மீது வழக்கு போட்டு, ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கிறது.


கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து அவரது மகன் வருகிறார். இது குடும்ப கட்சி. எங்களை பார்த்து அடிமைகள் என்கிறார்கள். நாங்கள் எந்த காலத்திலும் யாருக்கும் அடிமை இல்லை. எடப்பாடி பழனிச்சாமி யாருக்கும் அடிமை இல்லை. ஜெயலலிதா உருவாக்கிய அவர், சிங்கம் போல இருப்பார். கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், மதிமுகவினர் திமுகவிற்கு அடிமையாக இருக்கிறார்கள். சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தாகளா? உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதை கண்டித்தார்களா? கம்யூனிஸ்ட்கள் திமுக கம்யூனிஸ்ட்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் திமுக காங்கிரசாக இருக்கிறது. நீங்கள் தான் அடிமைகள். சொத்து வரி, மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார்” எனத் தெரிவித்தார்.