கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளிக்குப்பம்பாளையம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 1811 என்ற டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் (49) என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த கடையில் நேற்று குணசேகரன் (45), கரியபெட்டன் (54) உள்ளிட்ட இருவர் விற்பனையாளராக பணியில் இருந்துள்ளனர். இக்கடையில்  மாலை 6 மணிக்கு வழக்கம் போல் கரியபெட்டன் என்ற விற்பனையாளர் விற்பனை பணியில் இருந்துள்ளார்.


அப்போது கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் முதலில் இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் மூன்றாவது முறையும் பெட்ரோலை பற்ற வைத்து வீசியுள்ளனர். இதனால் அலறி அடித்துக் கொண்டு  விற்பனையாளர்கள் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சில் கடையில் இருந்த சரக்குகள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை காவல் துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் மேலாளர் பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த நிலையில் கடந்ந சில மாதங்களுக்கு முன்பு இதே கடையின் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் விஜய் ஆனந்த் மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கியில் டாஸ்மாக்கில் விற்பனையான பணத்தை டெபாசிட் செய்ய சென்ற போது டூவீலரில் வந்த இருவர் விஜய் ஆனந்தின் தோள்பட்டையில் கத்தியால் குத்தி விட்டு சென்றுள்ளனர். இதேபோல் கடந்த மாதம் ஆலாங்கொம்பு பகுதியில் சூப்பர்வைசர் விஜய் ஆனந்த் விற்பனையான பணத்தை டெபாசிட் செய்ய சென்ற போது வழிமறித்து டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாலையும் இதே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மனைவி தன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் மனமுடைந்த கார்த்திக் என்ற நபர் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண