நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45 வயது மதிக்கதக்க காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானை அப்பகுதி மக்களால் 'ரிவால்டோ' என அழைக்கப்பட்டது. யானைகள் ஒரிடத்தில் இல்லாமல் வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த யானை வாழைத்தோட்டம் முதல் மசினகுடி வரையிலான பகுதியில் சுற்றி வந்தது.  இந்த யானைக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு இருப்பதால், உணவு எடுத்து செல்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும் வலது கண் பார்வை குறைவும் உள்ளது. பெரும்பாலும் அந்த யானை அதிக நேரம் குடியிருப்பு பகுதிக்களுக்குள் நடமாடியதுடன், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த யானையை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து ரிவால்டோ யானையை கரோலில் அடைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். வழக்கமாக காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் பிடிப்பது வழக்கம். ஆனால் இந்த யானை மனிதர்களுடன் பழக்கப்பட்ட யானை என்பதால், வாழைத்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட கரோலில் பழங்களை வைத்து வரவழைத்து அதற்குள் அடைத்தனர். கரோலில் அடைக்கப்பட்ட அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இந்நிலையில் ரிவால்டோ யானையை கரோலில் இருந்து விடுவிக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். 




இதையடுத்து ரிவால்டோ யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்யவும் வன பகுதியில் விடுவதா? அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்று பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்ய 8 பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கபட்டது. அதில் முன்னாள் வன கால்நடை உதவி இயக்குனர் மனோகரன் தலைமையில் அமைக்கபட்டுள்ள இந்த  குழுவில் நீலகிரி மாவட்ட கால்நடைபராமரிப்பு துறை துணை இயக்குனர், சுற்றுசூழல் ஆர்வலர்கள், யானை நிபுணர்கள், வன உயிரியல் துறை பேராசிரியர் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றனர். அக்குழுவினர் ரிவால்டோ யானையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ரிவால்டோ யானையை வனப் பகுதிக்குள் விடுவிக்க நீலகிரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கை தந்தனர்.




இதனைத் தொடர்ந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விடுவிக்க முடிவு செய்தனர். யானையின் உடல் நிலை தேறியதை அடுத்து, யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தினர். இதையடுத்து இன்று கரோலில் இருந்து ரிவால்டோ யானையை வெளியே அழைத்து வந்த வனத் துறையினர், லாரி மூலம் கர்நாடகா எல்லையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிக்ஹல்லா வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. ரேடியோ காலர் மூலம் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X