கோவை செல்வபுரம், முனியப்பா தோட்டம் செட்டி வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும் (28), 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சந்தையில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, உணவகங்களுக்கு விற்பனை செய்யும் வியாபாரத்தை கார்த்திக் செய்து வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையானவர் எனவும், அந்த விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காய்கறி விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி கிரிக்கெட் விளையாடி வந்த அவர், அதில் ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த சில தினங்களாக கார்த்திக் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், இது குறித்து தனது மனைவியிடம் சொல்லி கார்த்திக் வேதனைப் பட்டதாகவும் தெரிகிறது. 


இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டில் சம்பாதிக்க முடியாமல் பணத்தை இழந்த விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி திவ்யா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செல்வபுரம் காவல் துறையினர், கார்த்திக்கின் உடலை உடற்கூராய்விற்காக பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்விற்கு பின்னர் கார்த்திக்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


நேரடி சூதாட்டம் தடை செய்யப்பட்டு வந்தாலும், ஆன்லைனில் கணினி, கைபேசி மூலம் ரம்மி விளையாடுவது அதிகரித்து வந்தது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபட்ட நிலையில், ஒரு சிலர் கடன் வாஙகி ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால், உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறின. இதில், சூதாட்டத்தை ஒடுக்கும் காவல் துறையினரும் பணத்தை இழந்து அதன்பின் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தன. இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார். தடையை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவலை இருப்போரை கண்டறிந்து குடும்பத்தாரும் அவர்களை தேற்ற வேண்டும்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050