முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.


கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மூத்த மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதியும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய அதிகாரியாக இருந்தவருமான ஆறுமுகசாமி கலந்து கொண்டு, அவரது உருவப்படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆறுமுகசாமி மேடையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கேட்டதற்காக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றிய என்னிடம் கேட்டார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் கேட்டார்கள். அதற்கு நான் சொல்வது என்னவென்றால், ஜெயலலிதா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ. சர்க்கரை அளவு 228 மில்லிகிராம். பி.பி. 160, கிரியேடின் 0.82, ஒ.பி சிட்டி, சுகர், பிபி. இதற்கு சர்ஜரி செய்யலாமா என்பது தான் முக்கிய விசயம். அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பது தான் பாயிண்ட். இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தேன்.


லேப்டாப் முன் உட்காருங்கள், இதனை எழுதுங்கள். இதனை கம்ப்யூட்டரில் அடியுங்கள். இதே மாதிரி ஒருவர் உயிருடன் இருப்பது போல ஒரு மருத்துவரை வைத்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்பதை வைத்து, நீங்களே ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம் என வழக்கறிஞர்களிடம் கூறினேன்” எனத் தெரிவித்தார்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி இரவு திடீர் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்து வந்த ரிப்போர்ட் மட்டுமே ஜெயலலிதா மற்றும் அவரது உடல் நிலை குறித்த அப்டேட்டுகளாக இருந்தது. முதலில் சாதாரண காய்ச்சல் என்று கூறப்பட்ட நிலையில்,  அதன் பின்னர் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்பட்டது.


அதன் பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல தரப்பிலிருந்தும் வேண்டுகோள்  எழுந்தது. குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது அணியில் இருந்த பலரும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறிவந்தனர். அதிமுக தரப்பில் பலரும் பல வகையில் பேசி வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் முழு விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தார் ஆறுமுகசாமி. தமிழில் 608 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட விசாரணை அறிக்கை  கடந்த அக்டோபர் மாதம் 18 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண