கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பூங்காவில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு அமைக்கப்பட்ட திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இளைஞர்களுக்கும் திறமைசாலிகளுக்கும் வாய்ப்பளிக்கக் கூடிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. கோவை மாநகர பகுதியில் சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளை சீரமைக்க கோரி பாஜக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அரசு சார்பில் பராமரிக்கப்படும் பூங்காக்களில் பெரும்பாலும் உடற்பயிற்சி கூடம் இருப்பதில்லை. எனவே குடியிருப்பு வாசிகள் கட்டணம் செலுத்தி தனியார் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று வரும் நிலை தான் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் இணைந்து இந்த பூங்காவை அரசு உதவியை எதிர்பார்க்காமல் சிறப்பாக பராமரித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் நிதி உதவியோடு திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மகளிருக்கான உடற்பயிற்சி கூடமும் இங்கு திறக்கப்படும்.
கோவை மாநகரில் உள்ள சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக சலீவன் வீதி, செட்டி வீதி, தண்ணீர் பந்தல், சேரன்மா நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சேரன்மாநகர் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை மலைக்கு பின்பு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மாநகரில் போடப்படும் சாலைகளும் தரமான சாலைகளாக போடப்படுவதில்லை. இதனை கண்டித்து கோயம்புத்தூர் மாவட்ட பாஜக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது மட்டுமின்றி குடிநீர் வழங்கல், தூய்மைப் பணி ஆகியவையும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. கோவை மாநகரத்தின் சில பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தான் தூய்மை பணியாளர்கள் குப்பை எடுப்பதற்காக வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை தற்போது வரை ஒப்பந்த பணியாளர்களாகவே பணியமர்த்தியுள்ளனர். மத்திய அரசு தூய்மை பணியாளர் நலனுக்காக தனியாக ஆணையம் அமைத்து அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு ஊதியம் தர வேண்டும் என அரசாணை பிறப்பித்தும், அதை அரசே கடைப்பிடிக்காமல் தூய்மை பணியாளர்களின் வயிற்றில் அடிக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அது குறித்து புகார் அளித்ததற்கு பிறகு, தற்போது பணிகள் மெதுவாக துவங்கி உள்ளது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் தனது மகனை அமைச்சராக்கி ஒரு குடும்பத்திற்குள்ளான ஒரு அரசாங்கத்தை முழுமையாக கொண்டு செல்ல முதலமைச்சர் முயற்சிக்கிறார். திமுக ஒரு குடும்பத்திற்கான கட்சியாக மாறியுள்ளது. தொடர்ந்து லஞ்ச ஊழல் புகார்கள் அவர்களின் மீது எழுந்து வருகிறது. திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மகன்கள் தான் இளைஞர்களாக உள்ளனர். அதே நேரத்தில் இளைஞர்களுக்கும் திறமைசாலிகளுக்கும் வாய்ப்பளிக்கும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்