கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை நம்பியிருக்க வேண்டிய நிலையுள்ளது. பல இடங்களில் இந்த தொலைக்காட்சி எடுக்காததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மலைப் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் வாழும் பழங்குடி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகவே உள்ளது. தொலைக்காட்சி இல்லை, மின்சாரம் இல்லை, கேபிள் இல்லை, கல்வி தொலைக்காட்சி வருவதில்லை, செல்போன் இல்லை, டவர் இல்லை என மலைத்தொடர்களை போல பிரச்சனைகள் நீடித்துக் கொண்டேயிருக்கின்றன.


கிடைக்காத கல்வித் தொலைக்காட்சி


இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கேபிளில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் மலை வாழ் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளர் பரமசிவம் முதலமைச்சர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.




இதுகுறித்து பரமசிவம் கூறுகையில், “வால்பாறை பகுதியில் 95 சதவீதம் பேர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியில் அரசு கேபிள் வருவதில்லை. தனியார் கேபிள்களில் கல்வித் தொலைக்காட்சி வருவதில்லை. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆட்சியில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வித் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பும் கேபிள் வால்பாறை மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மலைப்பகுதி என்பதால் சரியாக சிக்னல் கிடைப்பதில்லை என்பதால், ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வி பயில்வதை உறுதிபடுத்த வேண்டும்” என்றார்.


அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்


இதேபோல மதிமுக இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மாணவர்களுக்கு கடந்த வருடம் முதல் முறையான கல்வி கிடைக்க வழியில்லாமல் இணைய வழியாக கற்பித்தல் நடைபெறுகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் இந்த இணைய வழி கல்வி வாயிலாக தங்கள் திறனை வளர்த்திக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மட்டுமே உள்ளது. ஆனால் இந்த தொலைகாட்சியை மாணவர்கள் பார்க்கிறார்களா? இல்லையா? என்பதை ஆசிரியர்களால் கவனிக்க இயலவில்லை.




மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளிலிருந்து வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள். 5-6,8-9,10-11, ஆகிய வகுப்புகளில் சேர்வதற்காக மாற்று சான்றிதழ் வாங்காமல் பல இலட்சக்கணக்கான குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றது. இது மட்டுமில்லாமல் பள்ளி செல்லும் வயது குழந்தைகளும் பெரும் எண்ணிக்கையில் பள்ளியில் சேர்க்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வருகின்றது. கிட்டத்தட்ட 85 இலட்சம் அரசுப்பள்ளி மாணவர்களை  ஆசிரியருடன் பிணைப்பு ஏற்படுத்த இயலாததால் அவர்களை வழிநடத்த இயலவில்லை. இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகி வருகிறார்கள்.


இன்னும் எத்தனை நாள் இந்த கொரோனா பிரச்சனை இருக்கும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. இனி மூன்றாம் அலை வந்தால் மீண்டும் முழு அடைப்பு கொண்டுவரும் சூழலும் உள்ளது. இப்படியே சென்றால் அரசுப்பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எதிர்கால தலைமுறையை பாதுகாக்க,அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா ஸ்மார்ட் போன் அல்லது டேப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக 4000 கோடி அளவிற்கு செலவாகலாம். ஒரு வருடத்திற்கு 32000 கோடி வரை தமிழக அரசு பள்ளிக்கல்விக்காக செலவழிக்கிறது. இந்த செலவுகள் அனைத்தும் தற்போது வீணாகிதான் போகிறது. இந்த செலவுகள் பயன்பட வேண்டுமெனில் மொத்த செலவில் 15 சதவீதம் மாணவர்களின் இணையவழி கல்வி வாய்ப்பிற்க்காக செலவழிக்க வேண்டும். இதற்காக மக்களிடத்திலும் நிதி திரட்டலாம். இப்படி ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்துமானால், இதற்காக நிதி தர தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.