நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதன் மூலம், நாட்டிலேயே நூறு சதவீதம் பழங்குடிகளுக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை பரவல் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கணிசமான அளவு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை பரவல் பழங்குடியின மக்களையும் வெகுவாக பாதித்தது. எண்ணிக்கை அளவில் குறைவாக உள்ள பழங்குடியினரை பாதுகாக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி செலுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பழங்குடியினருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 27 ஆயிரத்து 32 பேரில், 18 வயதுக்கு மேற்பட்ட 21 ஆயிரத்து 800 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.




கொரோனா தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும்பாலான பழங்குடிகள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வந்தனர். இந்த அச்சத்தை களையும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தி வந்தனர். வனத்திலும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வீடுகளுக்கே சென்று சுகாதாரத்துறையினர் இரவு பகலாக தடுப்பூசி செலுத்தி வந்தனர். கிராமத்துக்கு தடுப்பூசி செலுத்த வரும் சுகாதாரத் துறையினரைக் கண்டாலே முதுமலை, கூடலூர், பந்தலூர் பகுதி பழங்குடியின மக்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்ட சம்பவங்களும் நடந்தன. அவர்களை தேடிப் பிடித்தும், ஒரு சில பகுதிகளில் இரவு வரை காத்திருந்தும் பழங்குடிகள் வீடு திரும்பியதும், தடுப்பூசி செலுத்தினர். யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றினர். பந்தலூர் அருகேயுள்ள கிளன்ராக் பழங்குடியின கிராமத்திற்கு 10 கி.மீ. யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த காட்டிற்குள் சுகாதாரத் துறையினர் நடந்து சென்று தடுப்பூசி செலுத்தினர்.


இப்படி நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் அசாத்திய முயற்சியால் நேற்று வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள பழங்குடியினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, 100 சதவீதத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே பழங்குடிகள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி எட்டியுள்ளது.




இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் குறைந்தளவிலான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தனர். இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு,  மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்றுவரை அனைத்து கிராமங்களிலும் உள்ள பழங்குடியின மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 100 சதவீதத்தை எட்டிவிட்டோம்” என்றார்.