கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதியன்று பள்ளி விடுமுறை என்பதால் அச்சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்று இருந்த அவரது தாயார் மாலை வந்து பார்த்தபோது, அச்சிறுமி வீட்டில் இல்லை என்பது தெரிந்தது. பின்னர் சிறுமியின் செல்போனுக்கு அவர் அழைத்த போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்த போது, சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அன்று காலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றதாக தெரிவித்துள்ளார். பின்னர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.




இதனைத் தொடர்ந்து தனது மகளை காணவில்லை என அவரது தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு ப்பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய முட்புதர் ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக துப்புரவு பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் பணியாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, கை கால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், பெட் சீட்டில் சுற்றப்பட்டு பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய சோதனையில் அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது.




இதை தொடர்ந்து சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




இதனிடையே மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தண்டனை வழங்க கோரி, மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதேசமயம் குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.