கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு யானை தந்தம் கடத்தப்படுவதாக கடந்த 31ம் தேதி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு யானை தந்தம் கடத்தி வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர். அப்போது துடியலூர் பகுதியில் நின்றிருந்த குழுவினர் சந்தேகப்படும்படியாக வந்த பொலீரோ ஜீப்பை மடக்க முயன்றனர். அப்போது வனத்துறை வந்த காரை இடித்து விட்டு பன்னிமடை வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். இதனை தொடர்ந்து மற்ற குழுக்களில் இருந்தவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பொலிரோ வாகனத்தை வனத்துறையினர் பின்தொடர்ந்து சென்றனர். அந்த வாகனம் தடாகம் வீரபாண்டி அருகே வரும் போது, வனத்துறையினரால் மடக்கி நிறுத்தப்பட்டது.
பின்னர் அந்த வாகனத்தில் வந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து யானை தந்தம் கடத்தி வந்ததும், வனத்துறையினர் அதனை கண்டு பிடித்ததால் அவர்களிடம் இருந்து தப்பி செல்லும்போது வீரபாண்டி அருகே சாலை ஓரத்தில் யானை தந்தத்தை வீசி சென்றதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு யானை தந்தம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து யானை தந்தம் கடத்தி வந்த நீலகிரி மாவட்டம் பிதர்காடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளர் சங்கீதா தலைமையில் நீலகிரியில் இருந்து யானை தந்தத்தை கடத்தி வந்ததும், அவருடன் வந்த கோவை இடையர்பாளையம் பகுதி சேர்ந்த விக்னேஷ், கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த லோகநாதன், நாகமாநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த அருள் அரோக்கியம், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.
யானை தந்தம் மீட்பு
இதனைத் தொடர்ந்து கடத்தி வரப்பட்ட யானை தந்தம் குறித்து கண்டறிய அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தடாகம் அருகே உள்ள வீரபாண்டி அருகே சாலை ஓரத்தில் யானை தந்தம் கிடப்பதாக தடாகம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் யானை தந்தத்தை கைப்பற்றி கோவை வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானை தந்தத்தை சோதனை செய்ததில், அது கடந்த 31ஆம் தேதி நீலகிரியில் இருந்து கடத்தி பெறப்பட்ட தந்தம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் யானை தந்தத்தை காட்சிப்படுத்திய பின்னர் வனத்துறையினர் அதனை சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு யானை தந்தம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வனத்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்ற நிலையில் வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் போது, அவர்கள் யானை தந்தத்தை சாலை ஓரத்தில் உள்ள புதரில் வீசி சென்றனர். ஆனால் அவர்கள் வீசிய இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தை கூறியதால் யானை தந்தம் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர், அதனை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைத்துள்ளோம். தொடர்ந்து அந்த தந்தம் யாருக்கு விற்க கொண்டுவரப்பட்டது என விசாரித்து வருவதாகவும் குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.