தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று பரவலாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 9.3 செ.மீ. மழையும், வால்பாறை பிஏபி பகுதியில் 7.2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.


வெள்ள அபாய எச்சரிக்கை


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணை நிரம்பக் கூடிய சூழ்நிலையில் உள்ளது. அணைக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது எனவே பில்லூர் அணை திறக்கப்பட்டு பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது மேலும் பவானி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது.


குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.36 அடி உயர்ந்துள்ளது. 49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையின்  நீர்மட்டம் 18.89 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று சிறுவாணி அணையில் நீர்மட்டம் 14.53 அடியாக இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. கன மழை காரணமாக தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறை திருவிக நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.


மழை நீரில் கழிவு நீரும் கலந்திருப்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் அப்பகுதி வாசிகள், வழக்கமாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் உடனடியாக மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது வரை யாரும் வராத நிலையில் நோய் தொற்று அபாயம் எழுந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் துரிதக் கதியில் செயல்பட்டு மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.