மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பல்வேறு மத்திய அரசு துறையை சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டியும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 300 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8ம் தேதியிலிருந்து காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைக்கும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக ரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கண்ணையா கலந்து கொண்டு பேசினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா, “பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. முதல்கட்டமாக நான்கு நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறோம். காலை 9 முதல் மாலை 5 மணி வரைக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இரயில்வே துறை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அதை சார்ந்த மக்களும் பாதிப்பு அடைந்துள்ளனர். மக்களுடன் பிரச்சினைக்கு சேர்த்து போராட்டம் நடத்தி வருகின்றோம். அடித்தட்டு, நடுத்தர மக்கள் பாதிப்படையமால் இருக்கும் வண்ணம் கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.


வந்தே பாரத் திட்டம் போன்றவையால் எளிய மக்கள் பதிப்படைய வாய்ப்புள்ளது. எல்லா பெட்டிகளும் ரயில்களை ஏ.சி.களாக மாற்றும் போது கட்டணம் உயர்வால் மக்கள் பாதிப்படைவார்கள் என்றார்.  மத்திய அரசு ஒவ்வொரு துறையாக தனியாருக்கு கொடுத்து வருகையில் இப்போது இரயில்வே துறைக்கு வந்துவிட்டார்கள் என்றார். தனியாரிடம் இரயில்வே சென்றால் ஆம்னி பஸ் போன்று இரயில்வேயில் பயணம் கட்டணம் ஏறும் என்றார். மேலும்  100 இரயில்கள் தனியாருக்கு கொடுத்துள்ளார்கள். போராட்டம் 3 வது நாளக  தொடரும் நிலையில் அரசு சார்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை" என்றார்.