Coimbatore: வனத்திற்குள் விடப்படும் கழிவு நீரில் இறந்து கிடந்த மான் ; வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவு நீரில் மான் ஒன்று இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம் நீலகிரி மலை தொடரில் அமைந்துள்ளது. அருகாமையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளதால், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான்கள் உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள்  வனப்பகுதியில் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரவு நேரங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவு நீரில் மான் ஒன்று இறந்து கிடக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் உள்ள தனியார் உள்ள உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவு நீர் தனியாக பைப் மூலம் வனப்பகுதிக்குள் விடப்படுகிறது. இதில் இரவு நேரங்களில் மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வந்து செல்கின்றன. இந்த கழிவு நீரை குடிப்பதால் மான்கள் போன்ற வனவிலங்குகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விடுவதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் செப்டிக் டேங்க் கழிவுகளும் திறந்து விடப்படுவதால் அதனை குடிக்கும் வன விலங்குகளுக்கு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், தண்ணீர் தேடி வந்த மான் அதனை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து வனத்துறையினர் அங்கு தேங்கியுள்ள தண்ணீரை சோதனைக்காக ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்ட போது, கழிவு நீர் தேங்கிய இடத்தில் இருந்த தண்ணீர் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே மான் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் தனியார் விடுதிகளில் இருந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்திற்கு கழிவு நீரை கொண்டு சென்று விடக்கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை மீறி கழிவுநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரங்களிலும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வனப்பகுதி ஒட்டி உள்ள பட்டா நிலங்களில் ஏதேனும் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறதா என்பதையும் அவர்கள் கவனிப்பார்கள். யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் போதே மீண்டும் வனத்துக்குள்ளேயே அனுப்ப வனத்துறையினர் மாலை நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி ரோந்து செல்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.

Continues below advertisement