திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் புரிந்து வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் செந்தில்குமார், இடம் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது செந்தில் குமாரின் உறவினரான மோகன்ராஜ் என்பவருக்கும் வெங்கடேசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேசன் மனோஜ்குமாரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் சரியாக வேலைக்கு வராததால் செந்தில்குமார் வெங்கடேசனை வேலையை விட்டு நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள அவரது தோட்டத்தில் அமர்ந்து வெங்கடேசன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தி உள்ளார். எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என செந்தில் குமார் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து கிளம்பி சென்ற வெங்கடேசன் மீண்டும் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த மோகன்ராஜை வெளியே அழைத்து வெங்கடேசன் பேசி கொண்டிருந்த போது, உடன் இருந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை மோகன்ராஜை சரமாரியமாக வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்ட அவரது மகன் வெளியே வந்து பார்த்து விட்டு, உடனடியாக அவரது பாட்டி புஷ்பவதி மற்றும் சித்தப்பா செந்தில்குமார் ஆகியோரை அழைத்துள்ளார்.
அங்கு வந்த அவர்கள் மோகன்ராஜை காப்பாற்ற முயன்ற போது, அவர்களையும் கொடூரமாக வெட்டியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மோகன்ராஜின் சின்னம்மா புஷ்பவதியையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த செந்தில்குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மோகன்ராஜிடம் வெங்கடேசன் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், செந்தில்குமாரிடம் இருந்து வேலையை விட்டு நின்ற நிலையில் பல முறை மோகன்ராஜ் பணம் கேட்டு தொலைபேசியில் அழைத்து கேட்டதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்த மோகன்ராஜை கொலை செய்ய திட்டமிட்ட வெங்கடேசன் தனது நண்பர்களை அங்கு அழைத்து வந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வெட்டி கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் மாதப்பூர் பா.ஜ.க கிளை தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி பாஜகவினர் மற்றும் உறவினர்கள் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பாக உள்ள கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நடந்த இப்போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட 4 நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் இன்று மாலை 5 மணிக்குள் போலீசார் கைது செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் மாலை 5 மணிக்கு பின்னர் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.