கோவை சித்தாபுதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், “மொழி என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிர். அதுதான் அடையாளம். உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ், உலகில் தோன்றிய முதல் மாந்தன் தமிழன். இந்தியா முழுவதும் தமிழை கொண்டவர்கள் தான் பரவி வாழ்ந்தனர். தமிழ் தெய்வத்தின் மொழி. தமிழர்களுக்கு கடவுள் கிடையாது, தெய்வங்கள் தான் உள்ளது. தெய்வமே என்பது எப்படி உருவாகிறது என்றால், எழுத்தறிவித்தவன் இறைவன் அவ்வளவு தான். எங்களைப் பொறுத்தவரை இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என்பது தான் எங்கள் கோட்பாடு. விடுதலைக்காக போராடும் போது ஆர்எஸ்எஸ் பிஜேபியில் இருந்த ஒருவரும் போராட்டம் நடத்தவில்லை. 1946ல் வரவேண்டிய விடுதலை 1947க்கு தள்ளப்பட்டதற்கு ஜின்னா தான் காரணம். ஜின்னா தனி நாடு கேட்கும் போதே எங்கள் தாத்தாக்கள் தனி தமிழ்நாடு கேட்டிருந்தால், மவுன்பேட்டன் பிரபுவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்போதே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என்று தனித்தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு சென்று இருப்பார். தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழன் ஒருவன் ஆள வேண்டும். அதற்கு நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும்.


என்னை கைது என்று சொல்லுவார்கள். ஜெயிலில் போடுவார்கள். ஜெயில் கட்டியதே எங்களுக்காகத்தான். ஆளுநர் எதற்கும் கையெழுத்திடாமல் சேட்டை செய்கிறார் என்று கூறுகிறார்கள். ஒரு இரண்டு மூன்று வருடம் கூறுங்கள் நான் வந்து விடுகிறேன். முடிந்தால் இதே ஆளுநரை நியமியுங்கள், நான் வந்தால் ஆளுநர் மாளிகையை பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு விடுவேன். மின் இணைப்பு, தண்ணீர் தொடர்பை துண்டித்து விடுவேன். மக்களால் நிறுவப்பட்ட ஆட்சிக்கு இல்லாத அதிகாரம் ஒரு நியமன உறுப்பினரான ஓசி சோறு சாப்பிடும் இவருக்கு எதற்கு இவ்வளவு அதிகாரம்? தமிழில் பேசவில்லை என்றால், தமிழ் மீட்சி படையை கொண்டு கடையை உடைத்து விட்டு தமிழில் பெயர் பலகை வைக்க சொல்லுவேன். இல்லையென்றால் மின்சாரத்தை துண்டித்து விட்டு கடையை பூட்டி சீல் வைத்து விடுவேன்.


வெறும் 3000 வருடத்திற்கு முன்புதான் தோன்றியது இந்த சாதி மத கோட்பாடு எல்லாம். என் இனத்திற்கு எதிராக என்னைப் பெற்ற தாய் தந்தையே வந்தாலும் எனக்கு எதிரி தான். எனக்கு இந்தியாவின் ரா, உளவுப்படை, ராணுவம், தமிழ்நாடு காவல்துறை என அனைத்து இடங்களிலும் எனக்கு ஆள் இருப்பது போல், உலகம் முழுவதும் எனக்கு ஆள் உள்ளார்கள். அதனால் தான் அவர்கள் என்னை இன்டர்நேஷனல் டெரர் பீஸ் என்று கூறி எனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்து விட்டார்கள். ஒரு நாள் அவர்களே அழைத்து எனது பாஸ்போர்ட்டை வழங்குவார்கள்.


என் நாடு என் மக்கள் என்று நடப்பவன் நான் அல்ல, அதை நடத்துபவன் நான். தமிழ் தேசிய இனத்திற்காக நான் போராடுகிறேன். 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன். 20 தங்கைகளுக்கு வாய்ப்பளிப்பேன். நன்கு படித்தவர்களை தேர்தலில் நிறுத்துவேன். எனக்கு பாராளுமன்ற கனவு இல்லை. தமிழ் தேசிய விடுதலை தான் என்னுடைய கனவு. ஒருவேளை ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி நின்றால் நான் எதிர்த்து நிற்பேன். ஒருவேளை திமுக உதயசூரியன் சின்னத்தில் மோடியை வீழ்த்துவதற்கு வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்தினால், நான் அமர்த்திய வேட்பாளரை திரும்ப பெற்றுவிட்டு அந்த ஒரு தொகுதியில் திமுகவை ஆதரிப்பேன். ஆனால் திமுக அந்த தொகுதியை கூட்டணிக்கு கொடுத்து விட்டால், நான் நேரடியாக மோதுவேன். இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்தால் 40 தொகுதிகளில் இருந்தும் நான் விலகிக் கொண்டு திமுகவை ஆதரிப்பேன். வருகின்ற தேர்தலில் காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் உங்களை ஆதரிக்கின்றேன். கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் நடிகையை பார்த்து செல்லோ என்று சொல்லியது நான் பேசியதை பார்த்து எடுக்கப்பட்டது.  அந்த பிட்டு என்னுடைய பிட்டு தான்” எனத் தெரிவித்தார்.