கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி பகுதியில் எலி காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலியானதை அடுத்து, சுகாதாரப் பணி தீவிரமடைந்துள்ளது.  


கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்திருப்பதால் பறவை காய்ச்சல் மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டியில் வசிக்கும் ரிஷோரியா என்பவரது மனைவி வனிதா. 23 வயதான இவர்,  5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனிடையே இவருக்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், காய்ச்சல் குறையாததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 28ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




அங்கு வனிதாவிற்கு வைரஸ் காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பரிசோதனையில் அவர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வனிதா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இந்த நிலையில் பணிக்கம்பட்டியில் வசித்த வந்த வனிதா கேரளாவில் உறவினர் வீட்டுக்கு சென்று வந்ததாகவும், இதனால் கேரளாவில் இருந்து எலி காய்ச்சல் அவருக்கு பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எலி காய்ச்சலுக்கு பொள்ளாச்சி அருகே கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கர்ப்பிணி பெண் வனிதா வசித்து வந்த பணிக்கம்பட்டி கிராமத்தில் தூய்மை பணி மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அக்கிராமத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்கம்பட்டி ஊராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் செய்து வருவதாகவும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுக்கு முகக்கவசம் அளித்து வருவதாகவும் அந்த ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண