கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ’மனசு ரொம்ப வலிக்குது’ என அஜித் ரசிகர்கள் கொவையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். திரைப்பட இயக்குநர் ஹெச்.விநோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால் வலிமை 'அப்டேட்' வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணைத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து நாட்டு வீரர் மொய்ன் அலியிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டனர். இது கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தேர்தலில் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வாங்கித் தருகிறேன் என வாக்குறுதி அளிக்கும் அளவிற்கு செல்ல வைத்தது. 




ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தன. வலிமை டீசர், டிரெய்லர் ஆகியவை வெளியாகி இரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியது. வலிமை பாடல்களும் இரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு நாளை எதிர்நோக்கி, அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவையும் அமல்படுத்தப்பட்டது.




இதன் காரணமாக வலிமை ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வலிமை திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த போது அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்கள், படம் வெளியாவதற்கு தயரான நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னரே, படம் வெளியாகும் என்பதால் வலிமையை காண அஜித் இரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு தொடர்கிறது. 


இதனிடையே கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் அடங்காத அஜித் குரூப்ஸ் - கோவை என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு தங்களது கவலையை அஜித் ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண