கோவையில் பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்ற தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை தட்டிக்கேட்ட உணவு டெலிவரி ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி என்ற நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் தனியார் பள்ளி வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகவும், அதனை தட்டிக் கேட்டதால் தன்னை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கியதாகவும் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட தனக்கு நீதி வேண்டும் எனவும், தன்னை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மோகனசுந்தரம் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து மோகன சுந்தரம் கூறுகையில், ”கோவை - அவிநாசி சாலையில்  உள்ள ஃபன் மால் சிக்னல் பகுதியில் நேசனல் மாடல் பள்ளி வாகனம் ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை நான் வழிமறித்து நிறுத்தி ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டேன். அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், ’இதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம் நீ யார்?’ என கேட்டு என்னை தாக்கினார்.  







 


அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என கேட்டு பள்ளி வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு, சிறிது நேரம் கழித்து என்னை அனுப்பினார். அந்த பெண் இது குறித்து கேட்ட போது போக்குவரத்து காவலர் அப்பெண்ணையும் நீங்கள் செல்லும் படி அனுப்பிவிட்டார். தனியார் பள்ளி வாகனம் செய்த தவறை தட்டி கேட்டதற்கு தன் மீது தாக்குதல் நடத்தியது நியாமற்ற செயல். இதுபோன்ற தவறு இழைத்தவர்களை விட்டு விட்டு தட்டி கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையல்ல. இதற்கு ஒரு நியாயம் வேண்டும். என்னை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். உணவு டெலிவரி ஊழியரை காவலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், போக்குவரத்து காவலர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண