ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தனியார் மருத்துவமனையில் கருமுட்டையை விற்பனை செய்து வருவதாக ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு புகார் ஒன்று வந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி ஆகியோரை கைது செய்தனர். 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஈரோடு தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


கைதான மூன்று பேரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணை பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சிறுமிக்கு 3 வயதாக இருக்கும் போது கணவரை பிரிந்து பெயின்டர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். தனது மகள் 12 வயதில் வயதுக்கு வந்ததும் கருமுட்டை விற்பனை தொழிலில் இறங்கியிருக்கிறார். கருமுட்டை உருவாவதற்காக வளர்ப்பு தந்தை தாயின் துணையுடன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், பாலியல் வன்கொடுமை செய்தும் வந்துள்ளார். இதனால், சிறுமிக்கு கருமுட்டை உருவானதும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார். பல வருடங்களாக தனியார் மருத்துவமனையில் கருமுட்டையை விற்பனை செய்து பணத்தை பெற்று வந்துள்ளனர்.


ஒவ்வொரு முறையும் விற்பனை செய்யும் போது ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். இதற்கு புரோக்கராக மாலதி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். அவருக்கு ரூ.5 ஆயிரம் கமிஷன் கொடுக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் கருமுட்டை கொடுத்து பணம் பெற வசதியாக சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் கார்டை தயாரித்து, சிறுமியின் பெயரை மாற்றி மருத்துவமனையில் கொடுத்துள்ளனர். இதுவரை சிறுமியிடம் இருந்து 8 முறை கருமுட்டையை  பெற்று ஈரோட்டில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையங்களுக்கு கருவை தானம் செய்துள்ளனர்.


இதுதொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என தாய், வளர்ப்பு தந்தை மிரட்டி வந்ததால் சிறுமி எதையும் கூறாமல் இருந்த நிலையில்,  இவர்களின் கொடுமையை தாங்காமல் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சித்தி, சித்தப்பாவிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் மூலம் இந்த விஷயம் தெரியவர, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 


இந்நிலையில் சிறுமியின் வயது தொடர்பான சிக்கலை தவிர்க்க ஆதார் அட்டையில் திருத்தம் செய்து போலி ஆதார் அட்டையை தயார் செய்த சூரம்பட்டியை சேர்ந்த ஜான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் ஜானை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியின் புகார் தொடர்பாக விசாரணை செய்து சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்களுக்குத் தெரிந்தே இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.