கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினர் கருமத்தம்பட்டி கரிய மாணிக்க பெருமாள் கோவில் அருகே சென்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பாபுராஜ் (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சாவை கொண்டு வர பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 


இதேபோல பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் பகுதியில் கஞ்சா  விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோட்டூர் காவல் துறையினர் கோட்டூர் மிதி பாறை அருகே சென்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த உடுமலை பகுதியை சேர்ந்த அப்பாஸ் (27) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1.050 கிலோ கிராம்  எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சாவை கொண்டு வர பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சூலூர் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது அப்பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திலீப் சுனா (29) கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து திலீப் சுனா என்பவரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு  காவல் துறையினர் கரையாம் பாளையம் அருகே சென்று சோதனை  மேற்கொண்டனர்.


அப்போது  கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஷ்மிகாந்த் டோரா (37) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1.250 கிலோ எடையுள்ள கஞ்சா சாக்லேட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் வகையில் இந்தாண்டில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 253 நபர்கள் மீது 197 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 452.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார். போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண்: 77081-00100 ஆகிய எண்ணையை  தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.