தமிழ்நாட்டில் இன்று 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் (Tamil Nadu 12th Result 2023) வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதலிடத்தையும், திருப்பூர் 97.79 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தையும், பெரம்பலூர் 97.59 சதவீதம் பெற்று 3 ஆம் இடத்தையும் கோயமுத்தூர் 97.57 சதவீதம் பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது.


கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 34 ஆயிரத்து 327 மாணவ, மாணவிகளில் 33 ஆயிரத்து 493 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 96.42 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி எண்ணிக்கை 98.55 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. 


கைதிகள்100 சதவீத தேர்ச்சி:


கோவை மத்திய சிறையில் 1500 க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டணை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்த ஆண்டு 12 சிறைவாசிகள்  12 ம் வகுப்பு தேர்வினை எழுதினர். இதில் தேர்வு எழுதிய சிறைவாசிகள் 12 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் எஸ்.கார்த்திகேயன் என்ற சிறைவாசி 481 மதிப்பெண்கள் பெற்றார். சுபாஷ் சந்திரபோஷ் என்ற சிறைவாசி  461 மதிப்பெண்களும், சந்தீப் என்ற சிறைவாசி 460 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதேபோல் கோவை மாநகராட்சியில் உள்ள 33 பள்ளிகளில் ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது போல கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 158 மாற்றுத் திறனாளிகளில் 149 பேரும், மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21 பார்வை மாற்றுத்திறனாளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார்  8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 47, 934 பேர் தோல்வியடைந்த நிலையில், அவர்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி துணைத் தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மறுகூட்டல்:


இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”விடைத்தாள் நகல்,  மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை (09.05.2023) காலை 11 மணி முதல் 13.05.2023 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண