கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் யூனிஸ். 28 வயதான இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (25). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த திவ்ய பாரதி, கடந்த 27ம் தேதியன்று பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த 29 ம் தேதியன்று திவ்யபாரதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கு தொடர்ந்து தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய இருந்தனர். 


இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திவ்யபாரதி தூங்கிக் கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். திவ்யபாரதி உறக்கம் கலைந்து பார்த்த போது, குழந்தையை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திரண்டு வந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.




பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் அருகில் இருந்த பள்ளிவாசலில் கண்காணிப்பு கேமராவில், இரு பெண்கள் கட்டப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும் அவர்கள் கோவை செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது.


இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள புதுநகரம் பகுதியில் குழந்தையை கடத்திச் சென்ற சமீனா மற்றும் அவரது மகளை காவல் துறையினர் கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து இன்று அதிகாலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட தாய் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


குழந்தை மீட்கப்பட்டது எப்படி?


பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், அப்பகுதியில் சுற்றியிருந்த 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் இருவரும் குழந்தையை கடத்திச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. பேருந்தில் ஏறிச் சென்ற இருவரும், ஆட்டோவிற்கு மாறி இரயில் நிலையம் சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுநரை பிடித்து காவல் துறையினர் விசாரித்த போது, இருவரும் இரயில் மூலம் பாலக்காடு சென்றது தெரியவந்தது. பாலக்காடு இரயில் நிலையத்தில் இருந்து இருவரும் ஆட்டோவில் சென்றதை அறிந்து, பாலக்காடு காவல் துறையினர் உதவியுடன் பொள்ளாச்சி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது புதுநகரம் பகுதியை சேர்ந்த சமீனா மற்றும் அவரது மகள் இருவரும் குழந்தையையுடன் இருந்த போது, கைது செய்து குழந்தையை காவல் துறையினர் மீட்டனர். 




இருவரும் எதாவதொரு குழந்தையை கடத்திச் செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து குழந்தையை வளர்ப்பதற்காக கடத்திச் சென்றார்களா அல்லது விற்பனை செய்வதற்காகவா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறும் போது, ”நேற்று அதிகாலை 4 மணிக்கு குழந்தை காணாமல் போனதாக தகவல் வெளியானது உடனடியாக குழந்தையை கண்டுபிடிக்க ஆறு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை இருக்கும் இடம் தெரிய வந்ததை அடுத்து, குழந்தை மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு சிசிடிவி கேமரா காட்சிகளும் மிக உதவியாக இருந்தது. எனவே அனைவரும் தங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும்” என கூறினார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்.