கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் 19 வயது இளம்பெண் மற்றும் அவரது 17 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.


கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளாக துரைராஜ் என்பவர் பணி புரிந்து வந்தார். 55 வயதான இவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் துடியலூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். துடியலூர் காவல் நிலையத்தில் பணி புரிந்த முன்னாள் காவல் ஆய்வாளர் வீட்டில் பணி புரியும் வேலைக்காரப் பெண்ணுடன் துரைராஜ்க்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய 19 வயது பெண்ணும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுமியும் என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு பேன்சி கடையில் வேலை செய்து வருகின்றனர்.


இதனிடையே கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு துரைராஜ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த  பெண் வீட்டில் இல்லாத நிலையில், அவர் 19 வயது பெண்ணை துரைராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் 17 வயது சிறுமியையும் துரைராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரது உடல் மற்றும் மன சித்ரவதையை தாங்க முடியாமல், நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு பெண்களும் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களின் தாயார் அவர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியும், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.


இதுகுறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இரண்டு பெண்களையும் காவல் துறையினர் தேடி வந்தனர். இருவரது செல்போன் எண்களை வைத்து காவல் துறையினர் கோவை நகரப் பகுதியில் அவர்கள் இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ், இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து துரைராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.