கோவை காந்திபுரம் பகுதியில் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மலையகம் தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் ‌சார்பாக பன்னாட்டு மாநாடு நடைபெற்றது.  இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆ.ராசா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையக தமிழருக்கான இயக்கத்தின் சார்பில் இன்றைய தினம் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.  அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இலங்கையிலிருந்து 1983 க்கு பிறகு வந்த தமிழகத்தில் மலையகத் தமிழர்களும் அடங்குவர். அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் நீலகிரிக்கு வந்த மலையக தமிழர்களுக்கு நில பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்றும் இனம் பிரித்து ஆய்வு செய்ய உள்ளோம். அந்த அறிக்கையை சமர்பிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு இரண்டு வாரங்களுக்கு முன்பாக தமிழக முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் முகாமில் இருக்கின்ற மலையக தமிழர்கள் எத்தனை பேருக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று என்பதை கண்டறியப்படும். பின்னர் தமிழக அரசு இந்த ஆய்வை எப்படி மேற்கொள்கிறதோ, அதேபோல இலங்கையில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசு சார்பாக ஒரு ஆய்வு அறிக்கை தயார் செய்யும்.




அந்த இரண்டு அறிக்கையும் ஒன்று சேர்ந்தது போல ஏறத்தாழ இதே மாதிரியான எண்ணிக்கை ஆய்வறிக்கைகள் இடம் பெற்று இருக்கின்றன. முதலமைச்சரிடம் இரண்டு வாரத்துக்கு முன்பாக  அறிக்கை தரப்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களோடு இருக்கின்ற எல்லா பிரச்சினையையும் அறியும் வகையில் அறிக்கை சம்பந்தமாக முதலமைச்சரிடம் கலந்து பேசி, புதிய தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்வேன் என உறுதி அளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.


ஆ.ராசா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, ”அண்ணாமலைக்கும், எல்.முருகனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய நேர்மையை பேசுவதற்கு அண்ணாமலைக்கோ, எல் முருகனுக்கோ பாஜகவுக்கோ எந்த அருகதையும் இல்லை” என ஆவேசமாக கூறிச் சென்றார்.