கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி பெண் கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் கவுன்சிலர், அவரது கணவர் மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. திமுகவைச் சேர்ந்த இவர், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் 3 வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்த போது, திடீரென முகமூடி அணிந்த நிலையில் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், சித்ரா அவரது கணவர் ரவிக்குமார் மற்றும் மகன் மோகன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. 3 பேரையும் தாக்கிய பின்னர், அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, 3 பேரும் படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.


இதையடுத்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மூவரும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சித்ரா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் 3 1/2 சென்ட் நிலம் வாங்கியபோது, ராஜா என்பவருக்கு 2 சதவீதம் புரோக்கர் கமிஷன் தருவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் கூறியபடி கமிஷன் பணத்தை தராத ஆத்திரத்தில் அடியாட்களுடன் வந்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.


இந்த தாக்குதலுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் வீடு புகுந்து கவுன்சிலர் குடும்பத்தினர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண