கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.


இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனிடையே ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக அப்சர் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.




கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்... அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பெட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ ஜெலசின், சிவப்பு பாஸ்பரஸ், அலுமியம் பவுடர், சிலிண்டர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரின் 3 நாள் கஸ்டடி முடிந்த நிலையில், காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவம் 'ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை' (Lone wolf attack) முறையை ஒத்திருப்பதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது தீவிரவாத அமைப்பின் உதவியின்றி தனியாக தாக்குதல் நடத்தும் முறையாகும்.




ஜமீஷா முபீன் தனது நெருங்கிய உறவினர்களாக அசாரூதீன் மற்றும் அப்சர்கான் ஆகியோருடன் கோனியம்மன் கோவில் உட்பட பல கோவில்களை சமீபத்தில் நோட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 3 டிரம்களில் வெடிமருந்துகளுடன் ஆணி, கோலிகுண்டு உள்ளிட்டவற்றை நிரப்பி காரில் வைத்துக் கொண்டு ஜமீஷா முபீன் காரை கோவில் முன்பாக நிறுத்தி சிலிண்டரில் இருந்து கேசை திறந்து விட்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்ன்றனர். இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்..ஏ விசாரணையை துவங்கும் முன்பே கோவை மாநகர காவல் துறையினர் முக்கியத் தகவல்களை சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.