நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சேரம்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும், காவலர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கடந்த ஒரு வாரமாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கூடலூர் புளியம்பாறை பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்பட்டார்.




சரத்குமாரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது எருமாடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த அமரன் (வயது 24) சேரம்பாடியில் தங்கியிருந்த அறையில், கடந்த சில நாட்களாக இவரது நண்பரான தேனி மாவட்டத்தில் காவலராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணேசன் என்பவர் தங்கியிருந்துள்ளார். அதே அறையில்  சேரம்பாடி காவல் ஆய்வாளரின் கார் டிரைவராக பணியாற்றிய உடையார் (வயது 26) என்பவரும் தங்கியிருந்துள்ளார். இதில் கணேசனுக்கும், கஞ்சா மொத்த வியாபாரிகளுக்கும் தொடர்பு இருந்துள்ளது. கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்து மொத்தமாக, வாங்கி வரும் கஞ்சா விற்பனையர்களுடன் கை கோர்த்துக் கொண்டு கணேசன் கஞ்சாவை கூடலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்துள்ளார். 


காவலர் அமரன் தனது காவல் நிலையத்திலிருந்து தபால் கொடுக்கவும், எஸ்.பி. அலுவலகம் செல்லும் போதும், போலீஸ் போர்வையில் கஞ்சாவை எடுத்துச் சென்று கணேசன் கூறும் நபர்களிடம் கொடுத்து வந்துள்ளார். இது குறித்து தகவல் தெரிந்தும்,  சேரம்பாடி காவல் நிலைய ஓட்டுநர் உடையார், ஊட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய விவேக் ஆகியோர் இது போன்ற தகவல்களை மறைத்து தெரிவிக்காமல் இருந்துள்ளதும் தெரியவந்தது. 




இதனைத் தொடர்ந்து காவலர்கள் கணேசன், அமரன், உடையார், விவேக் நால்வர் மீதும் சேரம்பாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கணேசன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். மற்ற மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உத்தரவிட்டார். இந்நிலையில் காவலர் அமரன் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தனிப்படை காவல் துறையினர் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


கூடலூர் பகுதி என்பது தமிழக கேரளா எல்லை பகுதியாக உள்ளதால், இதனை பயன்படுத்திக் கொண்ட  காவலர்கள் கேரளா, கர்நாடகாவில் இருந்து கஞ்சா கடத்தும் நபர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கஞ்சா வழக்கில் காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண