பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வருவது, உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் போர்:


கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


தொடர்ந்து நடந்து வரும் போரில் 2,000 குழந்தைகள் 1,100 பெண்கள் உள்பட 5000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், இஸ்ரேல் அதை மறுத்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்:


கடந்த வாரம், காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. காசாவில் கர்ப்பிணி பெண்களும், பச்சிளங்குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளாகியுள்ளனர். மின் தட்டுப்பாடு, தண்ணீர்ப்பற்றாக்குறை என காசா நகரம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பல மருத்துவமனைகளும் மின் பற்றாக்குறையில் ஜெனரேட்டர் மூலமாக இயங்கி வருகிறது.


இதனிடையே பாலஸ்தீனயர்களுக்கு ஆதரவாகவும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 24 ம் தேதியன்று கோவை உக்கடம் பகுதியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பாலஸ்தீன கொடி:


இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதனிடையே ஆர்ப்பாட்டத்தின் போது உக்கடம் பகுதியில் கட்டப்பட்டும் வரும் மேம்பாலத்தில் பாலஸ்தீனத்தின் கொடி பறக்க விடப்பட்டது. அந்த பாலத்தின் மீது ஏறிய சிலர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாலஸ்தீன கொடியை பறக்க விட்டனர்.


இது தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் ரேணுகா தேவி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஜமாதே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹீர், ரபீக் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.