கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசும், திமுகவும் வரலாற்று தவறுகளில் இருந்து சரியான படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டும். 1998 தொடர் வெடி குண்டு சம்பவம் 42 உயிர்களை கோவை இழந்தது. கொலை பாதகத்தை செய்தவர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்துவதும், அவர்களை அரசே அரவணைப்பதும் கண்டனத்திற்குரியது. அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பதும், அதற்கு அண்ணா பெயரை பயன்படுத்துவதும் சரியானது அல்ல. இதனால்தான் இன்று கவர்னர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைய தமிழக அரசே காரணமாக இருக்கிறது. தவறு செய்பவர்களை கண்டிக்காமல், அரவணைக்கும் போக்குதான் தமிழக அரசிடம் காணப்படுகிறது. இது கண்டனத்திற்குரியது. இதனை தமிழக அரசு திருத்திக்கொள்ள வேண்டும்.
ஆரியம் திராவிடம் எங்கே இருக்கின்றது? திமுக எதையாவது சொல்லி கொண்டே இருக்கும். வேண்டாத விவாதங்களை கிளப்பி தங்களுக்கு அரசியல் லாபத்தை தேடிக்கொள்வது திமுகவின் வாடிக்கை. சனாதானத்தை எதிர்ப்பதாக சொன்னார்கள். உடனே ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர், அகிலேஷ் யாதவ் போன்ற அவர்கள் கூட்டணியில் உள்ளவர்களே அலறுகின்றனர். தேவையற்றதை ஒதுக்கி விட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் அக்கறையையும், கவனத்தையும் முதல்வர் ஸ்டாலின் செலுத்துவது நல்லது” எனத் தெரிவித்தார்.
ஆரியம் திராவிடம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, 1967-இல் இருந்து இதுவரை என்ன ஆய்வு செய்திருக்கிறார்கள்? ஏன் ஆய்வுகள் செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேவையில்லாதவற்றை பேசி மக்களது கவனத்தை திசை திருப்பப்படுகின்றது. ஒட்டுமொத்த தமிழகம் கூலிப்படையின் செயல்களுக்குள் இருக்கின்றது. கஞ்சா போதை பொருள் அதிகமாக வியாபாரம் செய்யப்படுகின்றது. இதை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை கவனத்தை செலுத்தவேண்டும். கஞ்சா தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும். டி.ஆர். பாலு ஆளுநர் குறித்து விமர்சிப்பதை விட்டு, தமிழக கவர்னரை பயன்படுத்தி மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். இது டி.ஆர். பாலுவுக்கு நல்லதோ, இல்லையோ தமிழகத்திற்கு நல்லது.
தமிழரை பிரதமராக்க வேண்டும் என்பவர்களுக்கு, மோடியை பிரதமராக்க கூடாது என்ற ஆதங்கம்தான் வெளிப்படுகிறது. மோடியை எல்லா தமிழர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஒரு தலித்தை முதல்வராக மாற்றி முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பிரதமராக எடப்பாடி பழனிச்சாமி வர அனைத்து தகுதிகளும் இருக்கின்றது என ராஜேந்திர பாலாஜி சொல்லியிருப்பது திராவிட மாடல். எது நடக்கவில்லை என்றாலும் தன்னுடைய தலைவர்களுக்கு துதி பாடுவதுதான் திராவிட மாடல்.
திராவிட மாடலை விட்டுவிட்டு, தமிழ்நாடு மாடலுக்கு வந்திருக்கிறார்கள். பின்பு வேறு ஏதாவது ஒரு மாடலுக்கு போவார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு தேவையா? இல்லையா? என்பதை காலமும் சமூகமும் முடிவு செய்யும். சைலேந்திரபாபு மற்றும் சங்கரய்யா ஆகியோரது கோப்புகள் நிறுத்தி வைத்திருப்பது குறித்து அடுத்த முறை தமிழக கவர்னரை சந்திக்கும்பொழுது, இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் அவரிடம் பேசுகிறேன்” எனத் தெரிவித்தார்.