கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தைச சேர்ந்தவர் தெய்வானையம்மாள். 75 வயதான இவர், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மூதாட்டி இறந்த நிலையில் கிடப்பதாக பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினருக்கு தகவல் வந்தது.


மூதாட்டி கொலை:


இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நகைக்காக மூதாட்டியை சஞ்சய், கௌதம், ஈஸ்வரி, பானுமதி மற்றும் 16 வயது சிறுவன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.


இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது, ”தெய்வானையம்மாள் வீட்டில், ஈஸ்வரி தனது மகன் சஞ்சய் உடன் குடியிருந்து வந்தார். பின்னர், அதே தெருவில் ஈஸ்வரி மற்றொரு தனி வீட்டுக்கு சென்றார். அவ்வப்போது, தெய்வானையம்மாள், உதவி செய்ய சஞ்சய்யை அழைப்பது வழக்கம். இந்நிலையில், சஞ்சய்க்கு பைக்குக்கு பணம் கட்ட, 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது.


திட்டம் திட்டிய மருமகள்:


மூதாட்டியிடம் நகையை பறிக்க திட்டமிட்ட சஞ்சய் அவரது நண்பர் கவுதம் மற்றும் 17வயது சிறுவன் ஆகியோருடன் தெய்வானையம்மாள் வீட்டுக்கு சென்றனர். பின்னர் மூதாட்டியை கொலை செய்து, எட்டரை பவுன் நகையை திருடிச் சென்றனர். பாட்டி இறந்த தகவல் தெரிந்து கொண்டு அங்கு சென்ற ஈஸ்வரி பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இந்த விஷயங்கள் மூதாட்டியின் மருமகளான பானுமதிக்கு தெரிந்தும் மறைத்ததும், பானுமதி, ஈஸ்வரி ஆகியோர் கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து மருமகள் உட்பட 4 பேரையும் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை 8 மணி நேரத்தில் பிடித்த காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மீதமுள்ள 4 பேரும்  கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அடித்துக் கொலை:


இதேபோல கோவை மாவட்டம் கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (55). அதே பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் ஆகிய இருவரும் காளம்பாளையம் பகுதியில் மதுபானக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காளம்பாளையம் மதுபான கூடத்தில் செல்வராஜ் மது வாங்கும்போது ராகுல், கோகுல் ஆகியோரிடம் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.


இதனைத்தொடர்ந்து செல்வராஜை பின்தொடர்ந்து சென்ற ராகுல் மற்றும் கோகுல் ஆகிய அடித்து இழுத்துச் சென்று ஒரு தோட்டத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பேரூர் காவல்துறையினர் கோகுல், ராகுல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண