கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சாமிநாதன், ”முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். கர்நாடகாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான். அதை காங்கிரஸ்சும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்தனர். இன்று காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது. மற்ற மாநிலத்திற்கும் வழி காட்டும் அரசாக திமுக உள்ளது.
ஆட்சி பொறுப்பு ஏற்ற முதல் நாளில் கொரோனா நிதி உதவி, மகளிருக்கு பேருந்து பயணம், உள்ளிட்ட முக்கிய திட்டங்களை முதல் கையெழுத்தாக போட்டார் முதல்வர். கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தவர் முதல்வர். கொரோனாவை கட்டுப்படுத்த ஆட்சி பொறுப்பு ஏற்று 7 மாதங்கள் போராடினோம். கொரோனாவிலிருந்து சகஜ வாழ்க்கைக்கு காரணத்திற்கு முதல்வரின் நடவடிக்கை தான் காரணம்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மக்களை தேடி மருந்துகளை கொண்டு கொடுத்து வருகின்றனர். நம்மை காப்போம் 48 மணி நேரம். உதவி செய்பவர்களுக்கு 5 ஆயிரம் உதவி செய்கிறது. 48 மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு சேர்க்கை வந்தால் அரசு ஏற்கிறது. புதுமை பெண் திட்டம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு 1000 கொடுக்கப்பட்டு வருகிறது. படிப்பவர்களின் திறமைகளை மேம்படுத்த அரசு உதவுகிறது. தொலை நோக்கு திட்டங்களை முதல்வர் வகுத்து வருகிறார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் அவினாசி சாலை, பெரியநாய்கன்பாளையம் உள்ளிட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் திட்டமிட்ட காந்திபுரம் மேம்பாலம் அதிமுக ஆட்சியில் குறைபாடுடன் கட்டப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவின் திட்டங்கள் தான் கர்நாடக தேர்தலில் எதிரொலித்ததது. பாஜகவை காட்டிலும் காங்கிரஸ் அழுத்தமாக திட்டங்களை எடுத்துரைத்ததின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி என்பது தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. இது வட மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும். பாஜக மதரீதியாக மூளை சலவையை செய்து மக்கள் மத்தியில் அரசியல் செய்து வருகிறது. அதிலிருந்து கர்நாடக மக்களுக்கு தெளிவு ஏற்பட்டதால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது பிற மாநிலங்களில் தொடரும். பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அவை படிப்படியாக வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்