மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் வருகின்ற 18 ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகன அணிவகுப்பு பேரணியில் பிரதமர் கலந்து கொள்ள திட்டமிடப்படுள்ளது. கண்ணப்பன் நகர் பிரிவு சாலையில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த வாகன அணிவகுப்பு பேரணியானது நடைபெற இருக்கிறது. இதில் கோவை மட்டுமின்றி மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். சுமார் ஒரு லட்சம் பேர் வரை பிரதமர் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காவல் துறையினரை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை நகரில் பிரதமர் வருகையின் போது சுமார் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பிற்கான எஸ்.பி.ஜி பிரிவு அதிகாரிகளும் வாகன பேரணி நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றனர்.


இதனிடையே கோவையில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ். புரம் ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவித்துள்ளது, கோசை மாநகர காவல் துறை. இந்த பகுதிகளில் 19 ம் தேதி வரை டிரோன்கள் பறக்க மாநகர காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகளும், அதையொட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.


பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுப்பு


கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு காரணங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகன அணிவகுப்பு பேரணிக்கு கோவை மாநகர காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.


பிரதமர் சாலை மார்க்கமாக பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற அனுமதி கோரியுள்ள சாய்பாபா காலனி மற்றும் வட பகுதிகளானது பல்நோக்கு மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலங்கள், போக்குவரத்து பணிமனை, பேருந்து நிலையம், பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை நிறைந்த பகுதிகளாகும். இதனால் பேரணிக்கு அனுமதி வழங்கினால் மக்களின் அன்றாட பணிகள், இதர செயல்பாடுகளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறு நேரிடும் எனக்கருதப்படுகிறது. பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அனுமதி வழங்கினால் மாணவர்கள் தேர்வுக்கு இடையூறு நேரும் எனக்கருதப்படுகிறது. மேலும் பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நிலையில், சாலை மார்க்கமாக சுமார் 4.0 கி.மீ தொலைவிற்கு பேரணி செல்லும் சாலையின் இரு புறங்களிலும் கூடும் பெருந்திரளான மக்களில் ஒவ்வொரு தனி நபரிடமும் அபாயகரமான பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருத்தல் தொடர்பான சோதனைகளை மேற்கொள்வது என்பது மிகுந்த கடினமான செயலாகும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.