கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. வலுவான கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி என அத்தேர்தலை எதிர்கொண்ட திமுக, யாரும் எதிர்பாராத வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக படுதோல்வியை தழுவியது. இது கோவை மாவட்டத்தில் திமுக கட்சி கட்டமைப்பின் பலவீனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.


அதிரடி காட்டிய செந்தில் பாலாஜி


சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கோவையின் பொறுப்பு அமைச்சர்களாக ராமசந்திரன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி அடையாத திமுக, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை களமிறக்கியது. கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, அதிரடியான நடவடிக்கைகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை திமுகவில் இணைப்பது, கட்சி நிர்வாகிகளை வேலை செய்ய வைப்பது, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்துவது என அதிரடியாக பணியாற்றினார்.




நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை திமுகவினரை நம்பாமல், கரூரில் இருந்து தனது ஆட்களை இறக்கி தேர்தல் பணிகளை செய்ய வைத்தார், செந்தில் பாலாஜி. இதன் பலனாக கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சொந்த வார்டிலேயே அதிமுக தோல்வியை தழுவியது. கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் திமுக பெற்ற அபார வெற்றிக்கு செந்தில் பாலாஜியின் திட்டமிடலும், செயல்பாடுகளும் தான் காரணமாக அமைந்தது. இதன் விளைவாக கட்சியிலும், ஆட்சியிலும் செந்தில் பாலாஜியின் கை ஓங்க ஆரம்பித்தது. ஆனால் திடீரென அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முன்பாக அவர் வெளியே வர வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.


அலட்டிக் கொள்ளாத முத்துசாமி


செந்தில் பாலாஜி சிறை சென்ற பிறகு கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரானார், முத்துசாமி. துவக்கத்திலேயே நான் இடைக்கால பணியாக தான் கோவைக்கு வந்துள்ளேன் என சொல்லிவிட்ட அமைச்சர் முத்துசாமி, பெரிதாக அலட்டிக் கொள்ளாமலும், ஒட்டியும் ஒட்டாமலும் பணியாற்றி வருவதாகவும், அவரது செயல்பாடுகள் செந்தில் பாலாஜி அளவிற்கு இல்லை எனவும் திமுகவினர் கூறுகின்றனர். அதன் காரணமாக கட்சி பணிகள் தொய்வடைந்து இருப்பதாகவும் திமுகவினர் கூறுகின்றனர். செந்தில் பாலாஜியால் மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் இணைக்கப்பட்ட சிலர், மீண்டும் பழைய கட்சிக்கே சென்று விட்டனர். சிலர் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுக்கி உள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்குக் காரணமாக முத்துசாமி இருந்தாலும், அதன் பின்னணியில் செந்தில் பாலாஜியின் பங்கு மிக முக்கியமானது. அதனால தேர்தலில் செந்தில் பாலாஜி இல்லாததது ஒரு குறையாக திமுகவிற்கு உள்ளது.




என்ன செய்யப் போகிறது திமுக?


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பலவீனமாக உள்ள மேற்கு மண்டலத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தொகுதியை எதிர்பார்த்த கமல்ஹாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக விட்டு தரவில்லை. கோவை தொகுதியில் திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையிலும், கட்சியை பலப்படுத்தும் வகையிலும் திமுக நேரடியாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் திமுகவில் உள்ளது.




இதுகுறித்து திமுகவினரிடம் விசாரித்த போது, “அதிமுக வலுவாக உள்ள கோவையில் மக்களுக்கு பரிட்சயமான ஒருவரை தான் திமுக வேட்பாளரை தான் திமுக தலைமை களமிறக்கும். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து திமுகவில் இணைந்து ஐடி விங்க் இணை செயலாளராக உள்ள மகேந்திரனை தவிர வேறு பிரபலமான நபர் திமுகவில் இல்லை. தொழிலதிபரான அவரை போட்டியிட வைத்தால் பணம் செலவழிப்பதிலும் பிரச்சனை இருக்காது. ஆனாலும் செந்தில் பாலாஜி போல வேறு எவராலும் பணியாற்ற முடியாது என்பதால், அவர் இல்லாததது ஒரு குறை தான். இருப்பினும் திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி மகக்ளிடம் வாக்கு கேட்போம். அதிமுக, பாஜக பிரிந்து தேர்தலை சந்திப்பதால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் செந்தில் பாலாஜி இல்லாததது பெரிய பிரச்சனை இல்லை. திமுகவினர் ஒற்றுமையாக பணியாற்றினால் வெற்றி பெற முடியும்எனத் தெரிவித்தனர்.


தேர்தல் பணிகளுக்கு செந்தில் பாலாஜி இல்லாததாதும், அவரது இடத்தை நிரப்ப திமுக தலைமையால் முடியாததும் ஒரு குறையாகவே இருக்கிறது என்பது திமுகவினரின் கருத்தாக உள்ளது.