கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பட்டங்களை ஆளுநர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிக்கொண்டிருந்தபோதே, பட்டம் பெற வந்த மாணவர் ஒருவர், ஆளுநரிடம் நேரடியாக மேடையில் வைத்தே பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முனைவர் பட்டம் பெற லஞ்சம் – மாணவரின் பரபரப்பு புகார்


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியோடு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்களுக்கு வரிசைப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு மாணவர், ஒரு கடிதத்தை பிரித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுக்க முயன்றார்.


அருகே இருந்த நிர்வாகி அந்த மாணவரை தடுக்க முயன்றும், அந்த மாணவர் அவரை தாண்டி வந்து ஆளுநரை நேருக்கு நேர் சந்தித்து அந்த புகார் மனுவை ஆர்.என்.ரவியிடமே கொடுத்துவிட்டு, சில விஷயங்களையும் ஆளுநரிடம் சொல்லிவிட்டு தன்னுடைய பட்டத்தை பெற்றுக்கொண்டு சென்றார். அந்த கடிதத்தை ஆளுநர் தன்னுடைய செயலாளரிடம் கொடுத்து அதனை என்னவென்று பார்க்கும்படி உத்தரவிட்டுள்ளது பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யார் அந்த மாணவர், அவர் கொடுத்த புகாரில் என்ன இருந்தது ?


ஆளுநர் ஆர்.என்.ரவியிடமே அத்தனை பேர் மத்தியில் தைரியமாக புகார் கடிதம் அளித்த அந்த மாணவர் பெயர் பிரகாஷ், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற வந்தபோதுதான் அந்த கடித்தை ஆளுநரிடம் அவர் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் முனைவர் பட்டம் பெற படிக்கும் மாணவர்களிடம் பல்கலைக்கழக பேராசிரியர்களாக இருக்கும் சில வழிகாட்டிகள் (Guide), பல ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதாகவும், ஹோட்டலில் விருந்து வைக்க மாணவர்களை நிர்பந்தம் செய்வதோடு, தங்களது தனிப்பட்ட வேலைகளையும் செய்ய கட்டாயப்படுத்துவதாக மாணவர் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.


ஆதிதிராவிடர் விடுதிகளில் வசதியில்லை


அதோடு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் முறையாக இயங்குவதில்லை என்றும் வசதிகள் ஏதும் செய்துக்கொடுக்கப்படாமல் ஆதிதிராவிட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஆளுநரிடம் பிரகாஷ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி கடிதம் வழங்கியிருக்கிறார்.


மேலும் விளையாட்டு விழா என்று பெயருக்கு ஏதேனும் ஒரு விழாவை சொல்லி பல ஆயிர கணக்கில் மாணவர்களிடம் பணம் வசூல் வேட்டையில் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் ஈடுபடுவதாகவும் அவர் அளித்துள்ள புகாரால் பல்கலைக்கழக பேராசியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.