நீலகிரி மாவட்டத்தில் பணியர், கோடர், கோத்தர், காட்டுநாயக்கர், குறும்பர், இருளர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான பழங்குடியின மக்கள் சமூகம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரமும் பின் தங்கியே உள்ளது. பழங்குயின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொர் ஆண்டும் பல கோடி ரூபாய் நிதியை பழங்குடிகளுக்காக ஒதுக்கீடு செய்கின்றன. அரசின் இந்த வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாகப் பழங்குடிகளைச் சென்று சேராததே இவர்களின் பின்னடைவுக்குக் காரணம் எனப் பழங்குடியின செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இந்நிலையில் பழங்குடியினர் மேம்பாட்டுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில், ஊட்டி அருகில் உள்ள பாலடா பகுதியில் பழங்குடியின பெண்கள் பெட்ரோல் பங்க் ஒன்றினை நடத்தி வருகின்றனர். பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் இந்த பெட்ரோல் பங்க் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஒவ்வொரு பழங்குடி இனத்தில் இருந்தும் தலா இரண்டு பெண்கள் என மொத்தம் 12 பழங்குடிப் பெண்களின் கூட்டு முயற்சியால், இந்த பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வருகிறது. நகரப்பகுதிகளை விட குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் பங்க்கில் கிடைக்கும் வருவாய், பழங்குடிகள் மேம்பாடு மற்றும் அவர்கள் தொழில் துவங்க ஒதுக்கப்பட உள்ளது.




இதுகுறித்து நீலகிரி மாவட்ட பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார் கூறுகையில், ”நீலகிரியில் அழிவின் விளிம்பில் உள்ள 6 பழங்குடிகளுக்காக இந்த பெட்ரோல் பங்க் துவக்கப்பட்டுள்ளது. மத்திய பழங்குடியின அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை நிதியிலிருந்து முன் மாதிரியாக இந்த முயற்சியை மேற்கொண்டோம். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் படி, பெண்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 12பழங்குடிப் பெண்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 8,500 ரூபாய் ஊதியம் மற்றும் 3 சதவீத அகவிலைப் படியையும் வழங்கி வருகிறோம். தொலைவில் இருந்து வந்துள்ள பெண்களுக்கு பழங்குடியின மையத்திலேயே தங்கும் வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். இதுபோன்ற பெட்ரோல் பங்குகளை விரிவுபடுத்த அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்” என்றார்.


பழங்குடியின பெண்கள் கூறுகையில், “கடந்த கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருந்தோம். தற்போதைய கொரோனா ஊரடங்கிலும் குடும்பத்தில் யாருக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை. இந்த வேலையினால் வரும் ஊதியம் உதவியாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.


மற்ற பகுதிகளை விட இந்த பெட்ரோல் பங்க்கில் விலை குறைவாக இருப்பதால், இப்பகுதியினருக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், இதேபோல மற்ற பகுதிகளிலும் துவக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.