கோவை சேரன் மாநகர் பகுதியில் உணவகம் ஒன்றின் மீது இரவு நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை பிடித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சேரன் மாநகர் வினோபாஜி நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே பெட்டிக்கடை உள்ளது. நேற்று மாலை மாலை சில வாலிபர்கள் இந்த பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். சிகரெட்டுக்கான பணத்தை கேட்ட போது கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்ற வாலிபர்கள் இரவு 9.40 மணி அளவில் மீண்டும் அந்த பெட்டிக்கடைக்கு வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். ஆனால் தவறுதலாக பெட்ரோல் குண்டு அருகே இருந்த ஹோட்டல் அருகில் விழுந்து வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன் (வயது25) என்பவர் பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்ததால், அவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர், சிகரெட் கேட்டு தகராறு செய்து விட்டு தனது நண்பர்களுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசி சென்று இருப்பது தெரியவந்தது. உணவகத்திலும் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், அது உடனடியாக அணைக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய வரதராஜனை பிடித்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசராணை நடத்தி வருகின்றனர். அவருடன் வந்த மற்ற 2 வாலிபர்களையும் காவல் துறையினர் தேடிவருகிறார்கள். இரவு நேரத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.