கோவை ராஜவீதி தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ”18வது நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல, இந்தத் தேர்தல் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய தேர்தல். இந்தியா மதசார்பற்ற ஜனநாயகமாக நீடிக்கக் கூடிய தேர்தலாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஜனநாயகத்தை ஒடுக்குவதற்காக எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயகத்தை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் அறிவித்த பிறகு இரண்டு மாநில முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் இருவரையும் கைது செய்து எதிர்க்கட்சிகளை சமாளிக்க திராணி இன்றி அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூலம் இயக்கப்படும் பாஜக இந்த நாட்டை ஒரு இந்து நாடாக அறிவிக்க துடிக்கிறது. பாஜகவின் கொள்கை மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக இல்லை. எனவேதான் மதச்சார்பின்மைக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து மத அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். இந்தியாவின் அரசியல் சாசனம் என்பது சாதி மதம் மற்றும் இனங்களுக்கு அப்பாற்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாஜக அதை மாற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறது.
வேலையின்மை அதிகரிப்பு
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து இருக்கிறது. இதற்குக் காரணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்கப்படவில்லை. சிறு குறு தொழில் முனைவோருக்கு சாதகமான கொள்கைகள் எதையும் அமல்படுத்துவதற்கு இந்த அரசு தயாராக இல்லை. கோவை, திருப்பூர் போன்ற சிறு குறு தொழில்களை நம்பியுள்ள பகுதிகள் மோடி ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மூலப் பொருட்களின் விலை கடுமையான உயர்வை சந்தித்து இருக்கிறது. சிறு குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகள் எதற்கும் பாஜக அரசு ஒரு முறை கூட செவிசாய்க்கவில்லை. மின்சார உற்பத்தி, மின்விநியோகம், வங்கிகள், ரயில்வே, விமான சேவை என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் ஒழிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார்கள். தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் போக்குவரத்து என எல்லா செலவுகளும், லாபம் மட்டுமே இலக்காக கொண்டிருக்கும் தனியாருக்கு கொடுப்பதன் மூலம் பன்மடங்கு அதிகரிக்கும்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என விமர்சிக்கிறார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றிய உண்மைகள் வெளியே வந்த பிறகு மோடியால் தன் முகத்தை நேராக வைத்துக் கொண்டு மற்றவர்களை ஊழல்வாதிகள் என்று சொல்வதற்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது. தேர்தல் பத்திரம் தொடர்பான உண்மைகள் இது ஒரு பெரிய ஊழல் மற்றும் வழிப்பறி என்பதை நிரூபித்துள்ளது. தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஎம் வழக்கு தொடுத்த நிலையில், இப்போதுதான் உண்மைகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதைவிட மோசமான பெரிய வழிப்பறி என்பது அமலாக்கத்துறையையும், வருமானவரித் துறையையும் வைத்து மிரட்டி நிறுவனங்களிடம் வசூல் செய்வது. இந்தியா கூட்டணி என்பது ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல. கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்காகவும் தான்.
மாநில உரிமைகள் பறிப்பு
இன்றைக்கு பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசின் உரிமைகளில் செயல்பாடுகளில் தினமும் தலையிடுகிறார்கள். நீங்கள் என்ன மொழி படிக்க வேண்டும், என்ன தேர்வு எழுத வேண்டும் இப்படியான கட்டாயங்களுடன் இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடப்பதை பார்க்கின்றோம். இதன் மூலம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் இந்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுப்பதில்லை, நிதி கொடுப்பதையே ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். நிதி பெறுவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் போய் கோரிக்கை வைக்க வேண்டி இருக்கிறது. கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது தமிழக முதல்வர் கேரளாவுக்கு ஆதரவு கொடுத்தார், அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒத்துழைப்பு மாநிலங்களிடையே தேவைப்படுகிறது.
பாஜகவை இன்று நாம் தோற்கடிக்கவில்லை என்றால் மாநிலங்களின் உரிமைகளும் அதிகாரங்களும் தொடர்ச்சியாக பறிக்கப்படும். கூட்டாட்சி தத்துவம் என்பதற்கு ஒரு முடிவு கட்டப்படும். மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்காக, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்காக, பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன். கடந்த முறையைப் போல இந்த முறையும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு பூஜ்ஜியத்தை பரிசாக கொடுக்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவர் கோவையில் போட்டியிடுவதால் அக்கட்சி இங்கு வெற்றி பெற்று விடலாம் என பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. 19ஆம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்குகள் அவர்களது கனவுகளை பொய்யாக்கும் என்று நம்புகிறேன். இந்தியா கூட்டணி சார்பில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.