தமிழ்நாட்டில் கோடை காலம் நிலவி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் நிலவி வந்தது. கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே காணப்பட்டது.


இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் வெயில் சற்று அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை நேரத்தில் கோவை மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், ராமநாதபுரம், போத்தனூர், சிங்காநல்லூர், வெள்ளலூர், சுந்தராபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.


இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. தாழ்வான இடங்களிலும், ரயில்வே சுரங்கப் பாதையிலும்,மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்து இருப்பதால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் கனமழை காரணமாக நல்லாம்பாளையம் முதல் கவுண்டம்பாளையம் செல்லும் ரயில்வே மேம்பால பகுதியில் மழை நீர் தேங்கியது. மழை நீர் தேங்கி இருப்பதை சரிவர கவனிக்காமல் சென்ற ஒரு தனியார் மினி பேருந்து மழை நீரில் சிக்கியது. இதனால் அந்த பேருந்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தை மீட்டனர். இதேபோல கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிவேக மோட்டர் பொருத்தி மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரை மோட்டார் பொருத்திய வாகனம் மூலம் உறிஞ்சி நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.




கோவை புறநகர் பகுதியான மதுக்கரையில் இருந்து குரும்பாளையம் செல்லும் சாலையில் தரைப்பாலத்தின் மீது மழை வெள்ளம் ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அந்த வெள்ளத்தில் இரு சக்கர வாகனத்தை இயக்க, மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் கயிற்றின் மூலம் இருசக்கர வாகனத்தை கட்டி, தண்ணீரில் சிக்கிகொண்ட நபரை வாகனத்துடன் மீட்டனர். இந்நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் மழைக்காலங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும், மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.