கோவை மாவட்டம் வடவள்ளி அருகேயுள்ள நாவவூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர். 46 வயதான இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணன் (22) தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ரவி கிருஷ்ணன் கடந்த மாதம்ணம் பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாட சென்றுள்ளார். கோவை சிறுவாணி சாலையில் உள்ள செலிபிரிட்டி கிளப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்த அவர்கள், அதிகாலையில் காரில் வடவள்ளி நோக்கிச் சென்றுள்ளனர்.


ரவி கிருஷ்ணனின் நண்பர் ரோஷன் என்பவர் காரை அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். அப்போது போளுவாம்பட்டி- தொண்டாமுத்தூர் இடையே உள்ள தென்னமநல்லூர் பகுதியில் செல்லும் போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பின்னர் அப்பகுதியில் உள்ள பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்த கார், அங்கிருந்த 120 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் இருந்ததால் நான்கு பேரும் நீரிழ் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர்.


இந்நிலையில் காரை ஓட்டிய ரோஷன் மட்டும் காரின் கதவை திறந்து உயிர் தப்பினார். அவரது நண்பர்களான வடவள்ளியை கல்லூரி மாணவர்களான ஆதர்ஷ், ரவிகிருஷ்ணன், நந்தனன் ஆகிய மூன்று பேரும் காரிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர். கிணற்று தண்ணீரில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


ஒரே மகன் விபத்தில் உயிரிழந்த தகவலை கேட்டதில் இருந்து சஞ்சீவ் சங்கரும், நந்தினியும் விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் மகனுக்கு 40 வது நாள் நேற்று அனுசரிக்கப்பட இருந்தது. இதற்காக ஏற்பாடுகள் நடந்த நிலையில், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் இருவரும் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அப்போது நந்தினியின் சகோதரர் ஏதேச்சையாக நந்தினுக்கு போன் செய்துள்ளார். பலமுறை அழைத்தும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார். சஞ்சீவ் சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண