கோவை விமான நிலையத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றினோம். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும், ரத்து செய்வதுமாக உள்ளது. கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500க்கும் மேற்பட்ட பணிகளை ரத்து உள்ளது. திமுக ஆட்சியில் 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுப்பதற்கு முன்வரவில்லை.
வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனையும் இந்த அரசு கைவிட இருக்கிறது. தமிழக முதல்வருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் எல் அண்ட் டி சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதால், வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அதிக விலை போகும் என்பதால் தான் பேருந்து நிலையத்தை மாற்றுகின்றனர். இதனால் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
மெட்ரோ ரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் கிடப்பில் போட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். இந்த அரசின் மெத்தன போக்கினால் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. எந்த திட்டத்தையும் திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை. மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகள், மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் கிடப்பில் போட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் போதுமான நிதி ஒதுக்காத காரணத்தினால் அதுவும் முடங்கியுள்ளது.
ஆனைமலை - நல்லாறு திட்டமும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது. மின்கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுது கூறிய பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் முதியோர் ஓய்வூதிய உயர்வு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளது.
திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கிறது. இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரத்தை படைத்துள்ளது. ஒருவேளை இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படும். தற்பொழுது சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்ய கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் அரசாக இந்த அரசு உள்ளது. இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள். இந்த அரசாங்கம் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம்”எனத் தெரிவித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ”அவரை நம்பி அதிமுக கட்சி இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் அமலாக்கத்துறையில் இருந்து முதலில் அவரை காப்பாற்றட்டும். ஆறுக்குட்டி அதிமுகவில் இருந்தார் தற்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் அவர் தாவி உள்ளார்” எனத் தெரிவித்தார்.