கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளையும் இழந்த திமுக, கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் வியூகம் மற்றும் பணிகளால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றி பெற்றது. கோவை மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சொந்த வார்டிலும் அதிமுக வேட்பாளரை திமுக படுதோல்வி அடையச் செய்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவை தயார் படுத்தும் வகையில் கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறார், அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கோவைக்கு வருகை தந்துள்ளார். கடந்த 15 மாதங்களில் 5 முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்தார். நேற்று கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
கடந்த மாதம் நடத்த இருந்த இந்த நிகழ்ச்சிகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை செய்து வந்தார்.
ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 62 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவை என்றாலே பிரம்மாண்டம் எனவும் ஒரே மேடையில் அதிக பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை தந்த நிகழ்ச்சி மாநாடு போல நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டி பேசினார். அதேசமயம் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில், முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சாலையில் அலங்கார வளைவுகள், கொடிக்கம்பங்கள், பிளக்ஸ், பேனர்கள் திமுக சார்பில் வைக்கப்படவில்லை. பொள்ளாச்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் மட்டுமே திமுக கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன.
பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் மேடை அண்ணா அறிவாலயம் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் ‘திராவிட பேரசரர்’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டம் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அடித்தளமாக இருக்குமென அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வந்தார். அதற்கேற்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை திமுகவில் இணைக்க செந்தில் பாலாஜி தீவிர முயற்சி மேற்கொண்டார்.
அதன் பலனாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, தேதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன், முன்னாள் பாஜக மாநில மகளிரணிச் செயலாளர் மைதிலி உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், 55 ஆயிரம் பேர் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் ”அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு செயலில் இறங்கினால், அது பாராட்டுக்குரிய செயலாக இருக்கும்” என செந்தில் பாலாஜியை புகழ்ந்து பேசினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவினர் தயாராக வேண்டுமென ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பு பணிகளில் கரூரை சேர்ந்த திமுகவினர் களமிறக்கப்பட்டனர். கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு உரிய கவனிப்பு அளிக்கப்பட்டது. ஈச்சனாரி மற்றும் பொள்ளாச்சி நிகழ்ச்சிகளுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக அழைத்து வரப்பட்டனர். இதற்காக கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தனியார் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பொள்ளாச்சி பொதுக்கூட்டத்திற்கு மட்டும் சுமார் ஆயிரம் தனியார் பேருந்துகளில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். பொள்ளாச்சியில் இந்தளவு திமுகவிற்கு கூட்டம் கூடியதில்லை என காட்டும் வகையில் கூட்டம் திரட்டப்பட்டு இருந்தது.
கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் பூத் வாரியாக அதிக உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க வேண்டுமெனவும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டுமெனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவினருக்கு அறிவுறுத்தினார். திமுக பலவீனமாக உள்ள கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவினரை தயார் படுத்தி வருவதை இந்த நிகழ்ச்சிகள் வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.