கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, தேதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன், முன்னாள் பாஜக மாநில மகளிரணிச் செயலாளர் மைதிலி உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.




கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அத்தொகுதியில் 2011 மற்றும் 2016 ம் ஆண்டு தேர்தல்களில் இரண்டு முறை வெற்றி பெற்று, பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதிமுக அணிகள் பிளவுபட்ட போது ஒபிஎஸ்க்கு ஆதரவு அளித்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி. பின்னர் ஒபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் அணிக்கு தாவினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால், அதிருப்தியில் இருந்து வந்தார். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் தாக்கி பேசி வந்தார்.


கோடநாடு வழக்கு தொடர்பாக ஆறுக்குட்டியிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், திமுகவில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ், ஆறுக்குட்டியிடம் சில காலம் கார் ஓட்டுநராக பணியாற்றியவர். கோடநாடு சம்பவம் நடந்த போது கனகராஜ் ஆறுக்குட்டியிடம் செல்போனில் அழைத்து பேசியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகிய ஆறுக்குட்டி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். ஆறுக்குட்டியின் மகளும், அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயாவும் திமுகவில் இணைந்துள்ளார்.




இதனிடையே வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியதற்கு, மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அமுல் கந்தசாமி, "நான் திமுகவில் இணைய போவதாக விஷமதனமான பிரச்சாரம் செய்யப்படுகின்றது. திமுகவில் இணையும் எண்ணமில்லை. இது போன்ற  விஷமதனமாக தகவல்களை பரப்புவது திமுகவினருக்கு வாடிக்கை. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முடக்க வேண்டுமென திமுகவினர் இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். நான் அதிமுகவில் தான் நீடிப்பேன்" எனத் தெரிவித்தார்.


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுகவை கோவை மாவட்டத்தில் பலப்படுத்தும் பணிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வருகிறார். பல்வேறு மாற்றுக்கட்சியினரை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து வருகிறார். பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 55 ஆயிரம் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டு தெரிவித்து பொதுக்கூட்டத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்