நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மலை இரயில் மேட்டுப்பாளையம் நோக்கி 4 பெட்டிகளுடன் இன்று மாலை புறப்பட்டது. சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 174 பேர் இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் மலை இரயிலின் நான்காவது பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது. இதில் பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கியதால், நான்காவது பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. அதேசமயம் நல்வாய்ப்பாக அசாம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட 174 பயணிகளும், பேருந்து முலம் மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரயில் பெட்டியினை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டியினை சரி செய்த பின்னர் மலை இரயில் சேவை துவங்கும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலை இரயில் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில் தான். இந்த இரயில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான மலை இரயில் 123 ஆண்டுகள் பழமையானது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேகங்கள் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கை சூழலும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள் இடையே ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் என இனிமையான பயணத்தை இந்த இரயில் பயணிகளுக்கு தரும். இதன் காரணமாக இந்த மலை இரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே, பல் சக்கரம் உதவியுடன் மலைப் பாதையில் நீலகிரி மலை இரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலின் பெட்டிகள் பாதிப்பு இல்லாமல் இருக்க, ‘பிரேக்’ பிடித்து இயக்கப்படுகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயில், 12 மணிக்கு ஊட்டி இரயில் நிலையத்தை சென்றடைகிறது. இதனால் நீலகிரி மலை இரயில் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரியதாக இருந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்