கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முபினின் நெருங்கிய உறவினர்கள் அப்சர்கான், முகமது அசாருதீன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். உக்கடம் காவல் துறையினர் இந்த வழக்கை விசாரித்த நிலையில், வழக்கு தேசிய புலனாய்பு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேரின் பின்புலம் மற்றும் இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்புள்ளதா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.


இதில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஐ.எஸ்..எஸ் தீவிரவாத அமைப்பின் அனுதாபி என்பதும், அதன் மூலமாக இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதும் தெரியவந்தது. மேலும் முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கோவையில் பல்வேறு சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் சந்தேகத்துக்கிடமானவர்களை கண்காணித்து வருகின்றனர். அவர்களில் கோவையில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.




இந்நிலையில் கரும்பு கடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பாடுகள் இருப்பதாக கூறி, ஒசாமா என்கிற சுலைமான் மற்றும் அப்துல் காதர் ஆகிய இருவரது வீடுகளில்  சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் இருவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்களது வீடுகளில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றிய காவல் துறையினர் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதேபோல மேலும் சிலரை விசாரணை வளையத்துக்கு கொண்டு வரவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் பதிவிடுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவதால், தற்பொழுது இவர்களை விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் சோதனை நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண