மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி உள்ளிட்டவை விமரிசையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
இந்தாண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் நடத்தப்படும் கோடை விழா நடைபெற உள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில், வரும் மே 10 ஆம் தேதி 126வது மலர் கண்காட்சி துவங்க உள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த மலர் கண்காட்சி பத்தாம் தேதி முதல் 20 ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. அதேபோல், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64வது பழக்கண்காட்சி மே 24ஆம் தேதி துவங்கி, 26ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதேபோல கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, உதகை ரோஜா பூங்காவில் 19வது ரோஜா கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
உள்ளூர் விடுமுறை
இதனை இலட்சக்கணக்கான பல்வேறு வெளிமாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு இரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மலர் கண்காட்சியை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகின்ற மே 18ம் தேதியன்று பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.