Ooty Kodaikanal E Pass Online Booking: சென்னை மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்குதல் கொடூரமாக இருந்து வருகிறது. இது மே மாதம் என்பதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு இது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோடை விடுமுறையை அனுபவிக்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தவிர்க்கவும் கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புவது இயல்பான ஒன்றே. அந்த வகையில் தற்போது சுற்றுலா தலங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைகளுக்கு செல்ல இபாஸ் கட்டாயம் என நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் இன்று முதல் இ-பாஸ் தேவை என தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இபாஸ் அனுமதி வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக இப்பகுதிகளுக்கு செல்லும் கூட்டத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு 7.5.2024-30.6.2024 வரை வாகனங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்துசெல்ல உயர்நீதிமன்ற உத்தரவுப்படி epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்- 6.5.2024 முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும், பொதுமக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வந்துசெல்ல எந்த தடையும் இல்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ வாயிலாக இ- பாஸ் பெறுவது எப்படி..?
தமிழ்நாடு அரசு அறிவிப்பு:
தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இப்படி கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும் பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து 6.5.2024 காலை 6.00 மணி முதல் இ- பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இமெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.
மேலும் இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழி வகுக்கும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் 7.5.2024 முதல் 30.6.2024 வரை பின்பற்றுவார்கள். இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த இபாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இ. பாஸ் பெறுவது எப்படி..?
முதலில் நீங்கள் E-pass என்று கூகுள் பக்கத்திற்கு சென்று தட்டினால், நேரடியாக epass.tnega.org பெறுவதற்கான வெப்சைட்டுக்குள் நுழையும்.
அதனை தொடர்ந்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு கீழ் இந்தியாவுக்கு வெளியே மற்றும் இந்தியாவுக்கு உள்ளே என்ற இரண்டு பாக்ஸ்கள் காமிக்கும்.
அதில், இந்தியாவை சேர்ந்தவர் என்றால் இந்தியாவுக்கு உள்ளே என்ற பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பிறகு, நேரடியாக அது உள்நுழைய (log in) பக்கத்திற்கு செல்லும். அதில், உங்களது மொபைல் எண்ணை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
உள்ளே நுழைந்ததும் நீலகிரி, கொடைக்கானல், உள்ளூர் பாஸ், முந்தைய பாஸ்கள் என 4 பாக்ஸ்கள் தோன்றும். அதில், எந்த ஊருக்கு செல்ல வேண்டுமோ அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான், மேலே குறிப்பிட்டுள்ள விவரங்களை சரியாக பதிவிட்டு, இறுதியாக சமர்பிக்க என்ற பொத்தானை கிளிக் செய்தால் உங்களுக்கான இ-பாஸ் சொடக்கும் நேரத்தில் உங்களுக்கு வந்து சேரும்.