வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மனிதன்-வன விலங்குகள் இடையேயான மோதல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை ஒட்டியே யானை, புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றன. இதனால் அப்பகுதியில் அதிகளவில் மனித வனவிலங்கு மோதல்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீப காலமாக புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்ரீ மதுரை ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடிவரும் புலி ஒன்று, கால்நடைகளை வேட்டையாடிவருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 10க்கும் அதிகமான பசு மாடுகளை புலி தாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கு சொந்தமான ஆறு மாத கன்றுக் குட்டியை புலி தாக்கிக் கொன்றது. புலி தாக்கியதில் கொல்லப்பட்ட கன்றுக் குட்டியின் உடலை வாகனம் மூலம் கொண்டு வந்து, கூடலூர் கோட்ட வன அலுவலகத்தை நூற்றுக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கூடலூர் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புலி ஆடு, மாடுகளை தொடர்ந்து அடித்துக் கொன்று வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மூன்று மாநில எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, தற்காலிகமாக மறியலைக் கைவிட்டனர். இதையடுத்து வனத் துறையினர் புலியை பிடிக்க கூண்டு வைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். புலியை பிடிக்க கூண்டிற்குள் இறந்த மாட்டின் உடலை வைத்துள்ளனர். இதுவரை கூண்டில் புலி சிக்காமல் சுற்றி வருகிறது.
இந்நிலையில் இன்று பகல் 11 மணி அளவில் தேவர் சோலை பகுதியில் சந்திரன் என்பவர் மாடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென வந்த புலி சந்திரனை தாக்கியது. இதில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த அவர், அலறிய சப்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சத்தங்களை புலியை விரட்டி அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சந்திரன் உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திரன் உயிரிழந்தார். அப்பகுதியில் இதுவரை 2 பேரை புலி தாக்கி கொன்றுள்ளதாகவும், மக்களை அச்சுறுத்தி வரும் புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.