தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் விமானம் மூலமாக தமிழகம் வரக்கூடிய பயணிகளிடம் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஹை ரிஸ்க் நாடுகள் என்று அழைக்கப்படக்கூடிய நாடுகளிலிருந்து வரக்கூடியவர்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 46 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஒருவருக்கு உறுதியாகியுள்ளது.
கோவையை சேர்ந்த 69 வயது முதியவர் கடந்த 20ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவரது மாதிரிகள் மேல் பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு அவர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்த நபருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு லேசான தொண்டை எரிச்சல் உள்ள நிலையில், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய நிலையில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கோவையில் முதல் முறையாக ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. அவ்வப்போது கொரோனா பாதிப்புகளில் சென்னை முதலிடம் பிடிப்பதும், மீண்டும் கோவை முதலிடம் பிடிப்பதுமாக இருந்தது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து தினசரி பாதிப்பில் முதலிடம் வகித்து வருகிறது. அதனால் கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்