கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சியை தடுத்து நிறுத்த முயன்ற பல்வேறு அமைப்பினர் கைது செய்யப்பட்டனர் கோவையில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் போன்ற கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சாகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கல்வி நிலையங்களை மத வெறி கூடாரங்களாக மாற்றும் முயற்சி எனவும், கல்வி நிலையங்களில் சாகா பயிற்சியை நடத்தக் கூடாது எனவும் காவல் துறையினரிடம் அவ்வமைப்பினர் புகார் மனு அளித்தனர். இருப்பினும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்து சாகா பயிற்சியை கல்வி நிலையங்களில் நடத்தி வருகின்றனர். 




இந்த நிலையில் கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சாகா பயிற்சி இன்று காலை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகளை தடை செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




இது குறித்து தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், ”பாரதியார் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் பெண் உரிமை என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெச்.ராஜா போராட்டம் நடத்தினார். அப்போது கோவை காவல் துறை ஒரு மணி நேரம் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு 300 பேரைக் கூட்டி வைத்து ஒலி பெருக்கி வைத்து தமிழக அரசையும், திராவிட இயக்கங்களையும் கொச்சையாக பேசுவதற்கு அனுமதித்தது. 


இன்று கோவை ஸ்ரீ தர்ம சாஸ்தா மேல் நிலைப் பள்ளியில் மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை தடுக்கக் கோரி ஆர்ப்பாடம் செய்ய சென்றவர்களை ஒருங்கிணையக் கூட விடாமல் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தி காவல் துறையினர் தங்களது ஆர்.எஸ்.எஸ். பாசத்தை காட்டியிருகிறது” என அவர் தெரிவித்தார்.



பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண