தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் வித்தியாசமான முறையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பேரறிவாளன், டெபாசிட் தொகையான ரூ.10,000ஐ முழுவதும் 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களாக கொண்டு வந்து செலுத்தினார். இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், அவருடன் வந்த கட்சியினர் அவரது முகமூடிகளை அணிந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
நான் கோடீஸ்வரன் இல்லை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், கோவை தெற்கு தொகுதி முக்கியமான தொகுதியாகும் என்றும், இதில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகின்றனர் என்றும் தெரிவித்தார். இருவரையும் கடுமையாக விமர்சித்த அவர், “ஓட்டுக்கு பணம் வழங்காமல், இலவச பொருட்கள் கொடுக்காமல் என்னை விட அதிக வாக்குகள் பெற்றால், நான் பொதுவாழ்க்கையை விட்டு விலகத் தயார்” என சவால் விடுத்தார்.
மேலும், “நான் செல்வந்தர் அல்ல, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தத் தொகுதியில் உண்மையான போட்டி இருவருக்கிடையே தான் உள்ளது” என்றும் அவர் கூறினார். மக்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் பணம் மற்றும் இலவசப் பொருட்களின் தாக்கத்தை எதிர்க்கும் விதமாகவே 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களாக டெபாசிட் தொகையை செலுத்தியதாக பேரறிவாளன் விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
